மார்த்தாண்டம், ஜூன் 6 –
மார்த்தாண்டம் அருகே பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிவிளை அருகே புரவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (44). இவர் 12 வருடங்களுக்கு முன்பு விஷ்ணு பிரியா என்ற பெண்ணுடன் திருமணமானது. ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சதீஷ்குமார் 15 வருடங்கள் சவுதி அரேபியா நாட்டிலும், தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக துபாய் நாட்டிலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் பெண்ணின் புகைப்படம் வைத்திருக்கும் முகநூல் பக்கத்தில் இருந்து பிரெண்ட் ரக்வெஸ்ட் வந்துள்ளது. அது மூலம் நட்பாக சாட்டிங் ஆரம்பித்து நாள் செல்ல செல்ல காதலும், காமமும் கலந்த சாட்டிங் இருவருக்குமிடையே பரிமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் மறுபுறம் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் இருந்த நபர் சாட்டிங் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சதீஷ் குமாருக்கு அனுப்பி வைத்து பணம் கேட்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல கட்டங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டு சதீஷ் குமார் கேட்கும் போதெல்லாம் பணம் (சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறையில்) பணத்தை அனுப்பி கொண்டே இருந்தார்.
இந்நிலையில் திடீரென முன் பின் தெரியாத கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவர் ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து, தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் மூலம் இருவரும் சாட்டிங் செய்த ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் ஆக சதீஷ் குமாரின் நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் சதீஷ் குமாரின் மனைவி விஷ்ணு பிரியாவுக்கும் வாட்ஸ்அப் மூலமாகவும் நேரடியாகவும் தெரியப்படுத்தாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சதீஷ் மற்றும் மனைவி விஷ்ணு பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஷ்ணு பிரியா கணவன் சதீஷ் தொடர்பை துண்டித்து இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனால் துபாயில் இருந்து கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஊர் திரும்பிய சதீஷ் குமார் மனைவியிடம் சென்று சமாதானம் செய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால் மனைவி கணவன் சதீசை பார்க்கவோ பேசவோ விரும்பாத நிலையில் மிகுந்த மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் கடந்த மே 17 ம் தேதி புதிதாக தான் கட்டி குடும்பத்துடன் குடியேறிய சொந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் பக்கம் டெலிட் செய்த மர்ம கும்பல் ராஜீவ் என்ற பெயரில் தொடர்பு கொண்ட மொபைல் எண்ணையும் சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் சதீஷ் குமாரின் தாய் பளுகல் காவல் நிலையம், கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்த மர்ம கும்பலை கண்டு பிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்து தீர்வுக்காக காத்திருக்கிறார்.
பெண் பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கி இளைஞரை தங்களது வலையில் சிக்க வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பறித்த பின்பு தற்கொலைக்கு தூண்டி உயிரையும் பறித்து ஒரு குடும்பத்தையே நிர்கதியாக்கி விட்டு தலைமறைவான மர்ம கும்பல் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



