இராமேஸ்வரம், அக். 11 –
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு மீனவ சங்கத் தலைவர் சேசுராஜ் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது ஆனா கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தால் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் மீனவர்களை மனிதர்களாக கூட மதிக்காமல் வேண்டுமென்றே மீனவ மக்களை அரசியல் செய்யும் நோக்கத்தில் பழிவாங்கும் நோக்கத்திலும் நடந்து கொள்கிறது.
தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து நடவடிக்கை கண்டித்தும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் தான் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் சுமூகமாக பேசி மீன்பிடிப்பதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும்.
வருகிற தீபாவளிக்குள் மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக மீனவர் குடும்பங்களை ஒன்றிணைத்து தங்களுடைய சொந்த விசைப்படகுகளில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் படகுகளில் ஏற்றி கொண்டு கச்சத்தீவில் சென்று குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவ சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மீனவ சங்கத் தலைவர் சகாயம் போஸ் மார்கஸ் எமரிட் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



