நாகர்கோவில், ஏப். 11 –
குமரி மாவட்டத்தில் வழியாக கனிம வளங்கள் கடத்தும் டாரஸ் லாரிகளால் அடிக்கடி தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் நடந்து வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. குமரி மாவட்ட சாலைகள் குறுகியதாக உள்ளதால் டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்த பிறகு லாரிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தன.
இதற்கிடையில் குமரியில் எஸ் பி ஆக ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் கலியலை அடுத்த கிறிஸ்துராஜ் என்ற ராணுவ அதிகாரியின் மகள் காட்லின் அபினா (19) என்பவரை திருச்சியில் உள்ள கல்லூரிக்கு அனுப்ப தந்தையும் மகளும் பைக்கில் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது தக்கலை பகுதியில் வைத்து அந்த வழியாக டாரஸ் லாரி ஒன்று பைக்கில் மோதியதில் சம்பவ இடத்திலேயே காட்லின் அபினா உயிரிழந்தார். கிறிஸ்துராஜ் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து உடனடியாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீலன் தலைமையில் ஏராளம் பொதுமக்கள் இரவில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எஸ் பி ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் 2 நாட்களுக்கு டாரஸ் லாரிகளுக்கு முதலில் தடை விதித்தார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு இது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. இதை அடுத்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா 4 வழி சாலை பணிகள் முடியும் வரையிலும் குமரி மாவட்டத்திற்குள் கனிம வள லாரிகள் நுழையக்கூடாது என அழகுமீனா நேற்று உத்தரவு விட்டார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதை அடுத்து நேற்று இரவில் இருந்து டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டன. இதனால் மாவட்டத்திற்குள் வந்த டாரஸ் லாரிகள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன.
குறிப்பாக ஆரல்வாய்மொழி, குமாரபுரம் நான்கு வழிச்சாலையில் நீண்ட வரிசையில் டாரஸ் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற லாரிரகள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த தடை உத்தரவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
தற்போது கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளதால் கன்னியாகுமாரிக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நள்ளிரவில் கார்கள், வேர்களில் வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த தடை வரவேற்கக் கூடியது என அனைத்து தரப்பினரும் கூறியுள்ளனர். இந்த தடையால் தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று முன்தின இரவு முதல் வெறிச்சோடி காணப்பட்டன.



