முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
தேனி, செப். 11-
தேனி–அல்லிநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநருமான ம.கோவிந்தராவ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வைத் தொடர்ந்து, கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரத்தையும் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 303 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 30,056 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர். ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 37,653 மாணவர்கள், 619 பள்ளிகள் மூலம் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
நகர்ப்புற பள்ளிகளுக்கு சமுதாய சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. சமையல் கூடங்களை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தேவையான உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு உருளைகள் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும், தரமான உணவை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



