திருவள்ளூர், செப்.01.
திருவள்ளூர் மாவட்டம் சேலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்த நிலையில், தன்னை கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாகவும், சமூகத்தை குறிப்பிட்டு அவமதித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமணத்தை பதிவு செய்ய வலியுறுத்தியபோது பிரச்சினை ஏற்பட்டதாகவும், குழந்தையின் பிறப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பி டி.என்.ஏ. பரிசோதனை செய்யுமாறு கணவர் தரப்பினர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கியதாகவும், இதில் மயங்கி விழுந்த தன்னை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவசர சிகிச்சைக்குப் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தானும் குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், புகார்களை திரும்பப் பெறுமாறு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாகவும், தனக்கும் குழந்தைக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தனக்கும் தனது கைக்குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



