கன்னியாகுமரி, பிப். 2 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருடந்தோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தை நிறைபுத்தரிசி பூஜை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நெற்கதிர்களை மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பகவதி அம்மன் முன் நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சிறப்பு பூஜை முடிந்தபிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, அதன் பின்னர் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் மேலாளர் ஆனந்த் பக்தர்களுக்கு நெற்கதிர்களை வழங்கினார்.
இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவ னங்களில் கட்டி தொங்க தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெல் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பது ஐதீகம்.
நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. நிறைபுத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



