இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய தலைமுறை ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனமான ‘இந்திரஜால் ரேஞ்சர்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக பயணிக்கும் போதே, அனுமதியற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரோன்களை கண்டறிந்து, கண்காணித்து, அடையாளம் கண்டு, அவற்றை முறியடிக்கும் வகையில் இந்த வாகனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காவல்துறை வாகனங்கள் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வான்வெளியையும் கண்காணிக்கும் வகையிலான புதிய ரோந்து தொழில்நுட்பத்தை இந்தியா செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நகர்ப்புற காவல்துறையின் பயன்பாட்டிற்காக இந்த ட்ரோன் தடுப்பு வாகனங்கள் களமிறக்கப்பட உள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ராணுவத் தளங்களின் பாதுகாப்புக்காக மேம்பட்ட ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அரசாங்க அளவில் ட்ரோன் தடுப்பு ரோந்து திறனை செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்திரஜால் ரேஞ்சர்’ வாகனத்திற்காக சுமார் ரூ.155 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக இந்திரஜால் அட்டானமஸ் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் சிக்மா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு திறனை வழங்குவதற்காக ரூ.145 கோடி மதிப்பிலான ஆர்டரும், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற பாதுகாப்புக்காக சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான தனி ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எல்லைப் பகுதிகள், முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



