நாகர்கோவில், பிப்.19-
குமரி மாவட்டம் மாதவபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார் என்பவரது மகன் சந்தோஷ் (31). இவர் அந்த பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை தொடங்கினார்.
பின்னர் வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக சுமார் 130 நபர்களிடம் ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமலும், சிலரை விசிட்டிங் விசாவில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலைவாங்கி தராமல் திருப்பி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
உத்தரவின்படி காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் 130 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றவாளி சந்தோஷ் என்பவரை மதுரையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்க்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மேற்கண்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 9498196976 என்ற எண்ணிற்க்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கி கொண்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் அளிக்கலாம்.
வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.



