விழுப்புரம், ஆகஸ்ட் 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடராசா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை, விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அனைவரும் கட்டாயம் கல்வி பயின்றிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியத்துடன் கூடிய அடிப்படை கல்வி வழங்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்து ஏழை, எளிய மாணவர்கள் பசியின்றி ஆரோக்கியத்துடன் கூடிய அடிப்படைக் கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடராசா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் விழுப்புரம் நகராட்சியில் 10 அரசு உதவி பெறும் பள்ளிகளும், திண்டிவனம் நகராட்சியில் 11 அரசு உதவி பெறும் பள்ளிகளும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், வளவனூர் பேரூராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், மரக்காணம் பேரூராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், செஞ்சி பேரூராட்சியில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 27 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3362 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



