இரணியல், பிப். 9 –
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் குலாளர்தெரு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுபிதா (28). சுபிதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அருண்பிரசாத் (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
அருண்பிரசாத் கார்பன்டர் வேலை செய்து வருகிறார். சுபிதா அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தும்பவிளை காலணியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் அடிக்கடி தனியாகவும் சந்தித்து வந்துள்ளனர்.
இதை கண்டித்ததால் சுபிதாவுக்கும் அருண்பிரசாத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்து கொண்டு சுபிதா அவரது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். தற்போது நாகர்கோவிலில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சுபிதா தந்தை ராமகிருஷ்ணன் இறந்து விட்டார். வீட்டில் தாயார் சுந்தரி மற்றும் அவரது 2 மகன்களும் வசித்து வந்தனர். மகன்கள் அவ்வப்போது அருண் பிரசாத் வீட்டிற்கு சென்று அங்கேயும் தங்கி விடுவதும் உண்டு.
தாய் வீட்டிற்கு வந்த பிறகும் சுந்தரி, அனீசுடன் உள்ள கள்ள தொடர்பை தொடர்ந்துள்ளார். யாரும் இல்லாத போது வீட்டிற்கு அனீஸை வரவழைத்து அவ்வப்போது தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இதைப் பார்த்த சுபிதாவின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருந்தாலும் இந்த கள்ள தொடர்பை அவர் விடவில்லை. சுபிதா கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனீசுடன் சுபிதா செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) என்பவர் இது குறித்து சுபிதாவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மாற்று திறனாளியான ராஜேஷ் ஒரு கால் இல்லாததால் மரக்கால் உதவியுடன் நடந்து வருகிறார். இதனால் நிலை குலைந்து கீழே விழுந்த ராஜேஷ் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து சுபிதாவை தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியதாக கூறப்படுகிறது.
ரத்த காயம் ஏற்பட்ட சுபிதா படுக்கை அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை சுபிதாவின் படுக்கை அறை திறக்கப்படவில்லை. அவரை அழைத்தும் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சுபிதா தரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வெட்டுக்காயம் ஏற்பட்ட சுபிதா அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுந்தரியின் தாயார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராஜேஷ் இரணியல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் உறவினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுபிதா, அனீசை வீட்டிற்கு வரவழைத்து யாருக்கும் தெரியாமல் ஒரு அறையில் தங்க வைத்துள்ளார். சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அனீஸ் உள்ளே இருந்துள்ளார். இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அனீஸ் இனிமேல் சுபிதாவுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக கூறி சென்றுள்ளார். இதை அடுத்து அருண் பிரசாத் மனைவியை கோயம்புத்தூர் அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்தே சுபிதா, அனீஸை கோயம்புத்தூருக்கு வரவழைத்து அவருடன் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை



