நாகர்கோவில், அக்: 08
கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையின் சார்பில் வன உயிரின வார விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி. சாய்சரண் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “வனம் என்பது மரங்கள், செடிகள் மட்டுமல்ல; வன உயிரினங்கள், பறவைகள் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களையும் உள்ளடக்கியது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக எதிர்கால தலைமுறையினரான மாணவர்களின் கடமையாகும்” என்றார்.
வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், வனத்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



