மயிலாடுதுறை, ஜூலை 1 –
மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன நாகசுர வித்துவனாக பணியாற்றியவர் ‘சாகித்ய கர்த்தா’ கோவிந்தராசனார். 1933-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பிறந்த இவர், 1995-ஆம் ஆண்டு அதே தேதியில் தனது 62-வது பிறந்தநாளன்று உயிரிழந்தார்.
இசையில் புதிய படைப்புகளை உருவாக்கிய பெருமை கொண்ட இவரது 91-வது பிறந்தநாள் விழா, தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சென்னை தருமபுரத்தார் அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
இதில் திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் கோவிந்தராசனார் படைத்த இசையை நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் வாயிலாக வாசித்தனர். மேலும், கோவிந்தராசனார் எழுதிய பாடல்களுக்கு அவரது மாணவர்களிடம் தற்போது நாட்டியம் பயிலும் மாணவிகள் பரதம் ஆடினர். முன்னதாக கோவிந்தராசனார் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இவ்வாறு முத்தமிழ் விழாவாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கோவிந்தராசனாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறந்த இசைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசைக்கலைஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.