நாகர்கோவில், ஏப். 20 –
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பி.டி.செல்வகுமார் கூறினார்.
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் நல்லூர், இரவிபுதூர், மருங்கூர், குமாரபுரம் தோப்பூர், அமராவதிவிளை, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியதாவது: கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம் வெற்றி பெறும் பட்சத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் மருந்துவாழ்மலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக பாதையை சீரமைக்கவும், அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருவண்ணாமலை கிரிவலம் போன்று புகழ்பெற வைக்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படும்.
மயிலாடி சிற்பக் கலைஞர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தோவாளை சானல் கரையோர சாலைகள் தரமான முறையில் சீரமைக்கப்படும்.
இந்த பிரச்சாரத்தில் தாடி பாலாஜி பேசும்போது, நல்லவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இத்தொகுதியின் வேட்பாளர் தளவாய்சுந்தரம் அவரது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை தொகுதி முழுக்க சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.
பி.டி.செல்வகுமாரைப் பொருத்தவரை கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக மயிலாடி ரிங்கல் தௌபே பள்ளிக்கு கலையரங்கம், மயிலாடி காமராஜர் நகரில் செபஸ்தியார் ஆலயம் மற்றும் இப்பகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து வாழும் காமராஜராக திகழ்கிறார். நாங்கள் ஒன்றிணைந்து தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறோம். மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற ஒற்றை கோஷம் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே இரட்டை இலை வெல்லும் என தாடி பாலாஜி பேசினார்.
பிரச்சாரத்தின் போது அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி சீனிவாசன், மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி பாபு, குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மயிலாடி பேரூராட்சி அதிமுக செயலாளர் மனேகரன், நல்லூர் ஊராட்சி செயலாளர் லெட்சுமணன், பிரவீன், கலப்பை மகளிர் அணி அமைப்பாளர் அனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



