நாகர்கோவில், மே 27 –
மணக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் ஆல்பர்ட், அந்தோணிராஜன், அலோசியஸ் உட்பட 6 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவித்து தாயகம் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, 6 மீனவர் வீடுகளுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி மணக்குடி மீனவர்களை உடனடியாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் பிணைய தொகை இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், கூடிய விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள், தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்கும் நாட்டு படகுகளை மீட்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், கடலோர அமைதி வளர்ச்சி குழும இயக்குநர் பங்கு பணியாளர் பபியான்ஸ், ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின், மணக்குடி பங்கு பணியாளர் லாரன்ஸ், மனித உரிமை துறை மாநில செயலாளர் விமல்ராஜ், மனித உரிமை துறை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வின், மாவட்ட துணைத் தலைவர் செல்வின் ஊர் தலைவர் இருதயதாசன், பொருளாளர் மரிய அன்டனி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காஸ்டன், மிக்கேல் ஆகியோர் உடனிருந்தனர்.



