நாகர்கோவில், மே 11 –
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நிமிர் என்ற சிறப்பு சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்வி மீட்பு முயற்சியை தொடங்கி வைத்தார்.
போக்சோ குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த குழு மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகள், போதைப் பழக்கத்திற்கு ஆளான குழந்தைகள், குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களால் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்குள்ளான குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
குறிப்பாக பல்வேறு காரணங்களால் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கல்வியில் இணைக்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில் இருந்த மாணவ மாணவியர்களில் நிமிர் குழுவின் வழிகாட்டுதலால் மீண்டும் கல்வியை தொடர்ந்த 107 பேர், தற்போது நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான முழுமையான வழிகாட்டலும் ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.



