நாகர்கோவில், ஜூலை 15 –
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி வர்மன் (34). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கடையில் குட்கா புகையிலை விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் சபரி வர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 12-ம் தேதி காலையில் சபரி வர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறி, அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரிவர்மன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சபரி வர்மன் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குமரி மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின், சிறைத்துறை எஸ் பி செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறையில் வைத்து சபரி வர்மன் தாக்கப்பட்டு இருப்பது உறுதியானது. நேற்று சபரி வர்மனின் உடல் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதி சிறையில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த 12ஆம் தேதி இரவு சிறைக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து உயிரிழந்த சபரி வர்மன் சிறைத்துறை பணியாளர்களால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து நேற்று இரவு நேசமணி நகர் போலீசார் சிறை காவலர் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சபரி வர்மன் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து உணவு சாப்பிடாமல் விரக்தியில் இருந்துள்ளார். வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்டு உள்ளார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மற்ற கைதிகளுக்கும் சபரி வர்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கைதிகள் வார்டனிடம் புகார் செய்துள்ளனர். வார்டன்கள் தாக்கிய பின் கைதிகளும் இணைந்து சபரிவர்மனை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்து ஆகிய 8 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சபரிவர்மன் உடல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பலமுறை சபரி வர்மனின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதற்கு இடையே சபரி வர்மன் மனைவியின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும். கலெக்டர் இதற்கான உறுதியை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சபரி வர்மன் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று சபரி வர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.



