நாகர்கோவில், ஆக. 3 –
நாகர்கோவில் பழமையான எஸ்.டி. இந்து கல்லூரி கலையரங்கில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று துவக்கி வைத்து மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: எஸ்.டி. இந்து கல்லூரி, ஒரு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.
இது 1952-ஆம் ஆண்டில், தன்னலமற்ற தனிநபர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்விக்கு சேவையாற்றி வருகிறது. இக்கல்லூரி இரண்டு பிரிவுகளின் கீழ் செயல்படுகிறது. அரசு உதவி பெறும் பிரிவில் 12 இளங்கலைப் படிப்புகள் மற்றும் 10 முதுகலைப் படிப்புகளுடன், சுயநிதிப் பிரிவு – 8 இளங்கலைப் படிப்புகள் மற்றும் 6 முதுகலைப் படிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 200 ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் 85 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.
இந்த வருடம் முதுகலை வணிக மேலாண்மை பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எம்.பி.ஏ மிக முக்கியமான ஒரு படிப்பு. நீங்கள் எல்லாரும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்துள்ளீர்கள். தற்போது எம்.பி.ஏ பாடப்பிரிவில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அது மகிழ்ச்சியான செய்தியாகும். அதேபோல், தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே இவ்வளவு ஒரு அபரிமிதமான வளர்ச்சி இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அந்தக் கல்லூரி வழங்கும் கல்வியின் தரமாகும்.
இக்கல்லூரியில் படித்தவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாகவும், இந்திய ஆட்சி பணியாளர்களாகவும், இந்தியாவின் உயர்பதவிகளிலும், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து கல்லூரிக்கு பெருமை சேர்ந்து வருகிறார்கள். அதைபோன்று நீங்களும் நன்றாக கல்வி பயின்று பெரிய ஆளுமைகளாக வர வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் முதுகலை வணிக மேலாண்மை பாடப்பிரிவில் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவன் முஷின் ஜாசீர் என்பவரின் கல்வி செலவினை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதைத்தொடர்ந்து அதற்கான காசோலையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவர் முனைவர் நாகராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பேராசிரியர் முனைவர்.எஸ்.மாதவன், முதல்வர் முனைவர் அய்யப்பன், இயக்குநர் முனைவர்.சிவகாமி, பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



