கன்னியாகுமரி, ஆக. 14 –
சென்னை ரிப்பன் மாளிகை முன் 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள் என 900 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இச்செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: ஒரு வெளி மாநில தனியார் பெருமுதலாளியின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் அறவழி போராட்டத்தையும் அரச வன்முறையை பயன்படுத்தி ஒடுக்கும் திமுகவின் இந்த மக்கள் விரோத போக்கு ஒன்றும் புதிதல்ல, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கி எத்தனையோ மக்கள் புரட்சிகளை ஒடுக்கி இருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை.
இது ரிப்பன் மாளிகையோடு முடிந்துவிடும் போராட்டம் அல்ல. உங்கள் அதிகார கைகள் தளரும் வரை போராட்டம் தொடரும். “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” எனும் வள்ளுவரின் குறளுக்கு முதல்வர் ஸ்டாலினின் தந்தை எழுதிய விளக்க உரையையே உங்களுக்கு சொல்லிக்கொள்கிறோம்.
“கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்; மக்களின் கண்ணீரும் அறச்சீற்றமும்தான் உங்களை அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்போகிறது” என தெரிவித்தார்.



