தென்காசி, செப். 07:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேளம் மற்றும் கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. கலைச் சேவையில் வெள்ளி விழா கண்ட கலை வளர்மணி முத்துராமலிங்கத்திற்கு பாராட்டு விழா, நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என 3 நிகழ்வுகள் ஒருங்கிணைந்து நடைபெற்றன.
விழாவிற்கு ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் காளிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கலைச்சுடர்மணி வஸ்தல பிரியா, திருநாதகிரி ஜோதி ராமலிங்கம், காளீஸ்வரன், பிச்சையா என்ற குட்டித்துரை, முனிவேல் மூர்த்தி, மாடசாமி, சூரியகாந்தி, சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முப்பெரும் விழாவின் முக்கிய நிகழ்வாக, கலைச் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த வில்லிசை கலைஞர் கலை வளர்மணி முத்துராமலிங்கத்திற்கு சிறப்பான பாராட்டு வழங்கப்பட்டது. அவருக்கு மலர் கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, முத்துராமலிங்கத்தின் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கிராமிய கலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவம், சட்டம், சமூக சேவை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 100 சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் பத்மநாதன், மருத்துவர்கள் அகிலாண்ட பாரதி, பாலவிக்னேஷ், வழக்கறிஞர்கள் வேல்ராஜன், வீரபத்திரசாமி, யோகா ஜெயராம், பெரியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் வெள்ளத்துரை உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
விழாவில் திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை அலுவலர் கணேசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், தென் மண்டல முதிர்ந்த கலைஞர்கள் சங்கத் தலைவர் முனைவர் பாபுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியின் நிறைவில், தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேளம் மற்றும் கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத் தலைவரும், கலைச் சேவையில் வெள்ளி விழா கண்ட வில்லிசை கலைஞருமான முத்துராமலிங்கம் ஏற்புரையாற்றினார். நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் கலைஞர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.



