தென்காசி, செப். 23 –
தமிழக முதல்வர் என்ற இலக்கோடு பகல் கனவு காணும் தவெக ஒரு வெற்று கழகம் என இளைஞர் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் எஸ் எம் எஃப் அப்துல் காதர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : நேற்று கட்சி வங்கி இன்று கட்சி மாநாடு நடத்தி நாளைய தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆளும் முதல்வர் கனவோடு விஜய் களம் இறங்கி உள்ளது வேடிக்கையாகியுள்ளது. தான் நடித்த படங்களில் கட்சி சார்ந்த கருத்துக்களை பேசி அதை மக்களிடையே அழுத்தமாக சேர்த்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தன் ரசிகர்களை கட்சி உறுப்பினர்களாகவும் உடன் இருந்தவர்களை தோழமை கட்சியில் பொறுப்பாளர்களாகவும் மாற்றிய அரசியல் சாதுர்யம் அவரைத் தவிர வேறு எவரிடமும் இருந்ததில்லை.
அவருக்கு பின்பு சினிமாவில் அரசியல்வாதிகளை தட்டி கேட்பதாக அதிகார வர்க்கத்தை எதிர்ப்பவராக நடித்ததோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆரை போன்று தர்ம காரியங்களில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக பழகி விஜயகாந்த் கட்சி துவங்கிய சில ஆண்டுகளிலேயே அதிமுக கூட்டணி வாயிலாக 27 இடங்களை பெற முடிந்தது. இதைத்தொடர்ந்து வெவ்வேறு காரணங்களால் அவர் அரசியல் வாழ்வில் சறுக்கி விட்டார். கட்சியும் பெரிதாக வளர முடியவில்லை. அந்த வரிசையில் நடிகர் விஜய் தான் நடித்த ஒரு சில படங்களில் மட்டுமே அரசியல் பேசி தலைவராக தன்னை வரித்துக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்து இருக்கிறார். கூட்டம் கூடுகிறது. மக்கள் குவிக்கின்றனர். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் திரண்டு வருகின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவையெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா?
அரசியலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதும் அறிக்கை விடுவதும் அதன் பின்பு அமைதியாவது மட்டுமே அவரது நடவடிக்கைகளாக தொடர்கின்றனவே தவிர ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் செய்யப் போகிறார் எப்படி அரசியல் செயல்பாடுகள் இருக்கும் என்பது குறித்து இன்று வரை ஒரு முறை கூட அவர் தெரிவிக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவும் இல்லை. நேரடியாக எவ்வித போராட்டத்திலும் பங்கேற்கவும் இல்லை. ஆனால் முதல்வராக தன்னை முன்னிறுத்துவதும் கூட்டணிக்கு தானே தலைவர் என்று அறிக்கை விடுவதும் திமுக தவெக விற்கும் இடையே தான் போட்டி என்றும் விரத்தி வருகிறார். தமிழக அரசியலில் எப்போதுமே இருமுனை போட்டி தான் கடந்த 1967 க்கு முன் காங்கிரஸ் திமுக என்றிருந்த நிலை கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுகவுக்கு இடையே தான் போட்டி என்பது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்.
இந்த இரு கழகங்களையும் மீறி விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதெல்லாம் பகலில் கூட அந்தக் கட்சியினருக்கு குறிப்பாக விஜய்க்கு வரக்கூடாத கனவு திரைப்படத்தில் வருவது போன்று ஒரே காட்சியில் ஒரே அடியில் எதிரியை வீழ்த்தி விட முடியுமா? எனவே களம் மாறும்போது காட்சிகள் மாறலாம் அப்போது விஜய் மாறும் சக்தியா? இல்லை மாற்றும் சக்தியா? என்பதும் அவரது கட்சி வெற்றிக்கழகமா? இல்லை வெற்றிகழகமா? என்பதும் தெரிய வரும் இவ்வாறு எஸ் எம் எஃப் அப்துல் காதர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



