சென்னை, ஆகஸ்ட் 18 –
பட்டியலின, பழங்குடியினர் கிராமங்களில் மயானங்கள் அமைத்து தரவேண்டி தலித் விடுதலை கட்சி தலைவர் கருப்பையா தன் நிர்வாகிகளுடன் ஆதிதிராடர் மற்றும் பழங்குடியினத்துறை அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து முறையீடு செய்தார்.
அமைச்சரை சந்தித்தபின் கருப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் 128 தலித் கிராமங்களில் மயானங்கள் இல்லை என்ற அவலம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் தொடர்கதையாக நீண்டு கொண்டேயிருக்கிறது.
இது சம்பந்தமாக தலித் விடுதலை கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியதின் விளைவாக அப்போது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தனர். இதுவரையில் கோரிக்கைகளை நிறைவேற்றாதால் மீண்டும் அமைச்சர் மதிவேந்தன் அரசு இல்லம் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் அமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் அமைச்சரை சந்தித்து பட்டியல் பழங்குடியின மக்களுக்கு மயானம் மற்றும் மயானம் செல்வதற்கு சாலை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்று அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தார் .



