தருமபுரி, ஜூன் 25 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணை முன்பு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று 4 ரோடு, ரோட்டரி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும் “போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்”, “இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்”, “போதைப்பொருளை ஒழிப்போம்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன்: போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்தார். போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



