தருமபுரி, மே 12 –
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பஸ் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பாரதி ஜனதா நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில்: பாலக்கோடு நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால் பெண்கள், பொதுமக்கள் சாலைகளில் சென்று வர அச்சம் அடையும் நிலையில் உள்ளது. இதுபோல சந்து கடைகளில் மது விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது. இதை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய ஆட்சியர் சதீஷ் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர்கள் கவிதா, சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கராஜ், மக்கள் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



