தஞ்சாவூர், ஜூலை 6 –
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை அமைச்சர் வினோத் ரவி வெளியிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை 2026 தரவரிசை பட்டியல் வெளியீட்டு விழா நடந்தது.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான சங்கர் மாவட்ட கலெக்டர் ரேவதி, தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ விஜய் சரவணன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் துணைவேந்தருமான பொறுப்பு சுப்பிரமணியன், இளங்கலை வேளாண்மை முதன்மையர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி இளங்கலை மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது: இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக இணைய வழி மூலம் 14 பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 6ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களில் 15,757 பேர் பெண்கள். இவற்றில் அரசு கல்லூரிகளில் 2,856 இடங்களும், தனியார் இணைப்பு கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடான 3,051 இடங்களும், இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. பொது இட ஒதுக்கீட்டிற்கான தர வரிசை பட்டியலில் 22,987 விண்ணப்பதாரர்களும், தொழில் முறை கல்வி இட ஒதுக்கீட்டில் 1,193 விண்ணப்பதாரர்களும், இடம் பெற்றுள்ளனர் இதர மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 255 ஆகும்.
இதில் சிறப்பு அம்சமாக தமிழ் வழியில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் தோட்டக் கலை ஆகிய 2 பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ் வழியில் பயில தர வரிசைக்கு தகுதியான 24,435 மாணவர்களில் 7,664 மாணவர்கள் இசைந்துள்ளனர். சிறப்பு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 418 இடங்களுக்கு 8,746 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேளாண் தொழில்கல்வி பயின்ற மாணவர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டில் 239 இடங்களுக்கு 1,193 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடான 20 இடங்களுக்கு 190 பேர் விண்ணப்பித்தனர். முன்னாள் ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடான 20 இடங்களுக்கு 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டில் 126 இடங்களும் 27 பேர் விண்ணப்பித்துள்ளனர். செயற்கைக்கான இணைய வழி கலந்தாய்வு வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும். இது குறித்த விவரங்கள் https://tnau.ucanapply.com என்ற சேர்க்கைக்கான இணையதளத்தில் வெளியிடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
தரவரிசை பட்டியலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எம் கொளக்குடியை சேர்ந்த மாணவி மர்லின் முதலிடம் பெற்றார். ஈரோடு மாவட்டம் சூரப்பட்டியை சேர்ந்த மாணவர் மாதவராஜன் இரண்டாவது இடம் பெற்றார். மேலும் முதல் 10 இடங்களில் 6 மாணவிகள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



