தென்காசி, மே 29 –
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் இயற்கை எழிலோடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் சஷ்டி, தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு காலை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இவ்வழிபாட்டில் தமிழக மற்றும் கேரளத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பண்பொழி திருமலைக்குமாரர் எழுந்தருளிய தங்கத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.



