சுசீந்திரம், மே 25 –
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், ஆல்பிரட், அருள் பிரிட்டோ, ஜானு, அலெக்ஸ் இவர்கள் ஆறு பேரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்கி படகில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் ஆறு பேரும் மண்டபம் கடற்கரையில் இருந்து கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 11ம் தேதி காலை கரை திரும்ப வேண்டிய நிலையில், படகு பழுதானதால் கரை திரும்பவில்லை. மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களை சக மீனவர்கள் படகில் சென்று கடலில் தேடினர். அவர்களுக்கு உதவியாக இந்திய கடற்படை வீரர்களும் கடலில் தேடினர்.
இந்த நிலையில் எல்லையோரம் இருந்த இலங்கை கடற்படையினர் இங்கு யாரும் வரவில்லை என தமிழக மீனவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனடையே மாயமான மீனவர்கள் படகு பழுதான நிலையில் கடல் நீரோட்டத்தால் இலங்கை பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர், சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை பகுதிக்குள் சென்றதாக ஆறு மீனவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். தங்கள் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லவில்லை எனவும் ராமநாதபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் எந்திரம் பழுதானதால் காற்றில் படகு இழுத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு திரும்ப அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, தாயகம் அழைத்து வருவதோடு அவர்களது படகு மற்றும் படகில் காணப்பட்ட உபகரணங்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மணக்குடி மீனவ கிராம மக்கள் மணக்குடி தபால் நிலையம் முன்பு மீனவர்களை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குத்தந்தை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராம பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



