தஞ்சாவூர், ஆகஸ்ட் 23 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடைபெறுகிறது. போட்டிகள் வருகிற 26-ம் தேதி செவ்வாய்க் கிழமை தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடை பெறுகிறது.
ல்லூரி பிரிவினருக்கு கூடைப்பந்து, தடகளம், வாலிபால், ஆக்கி, கபடி, நீச்சல், மேஜை பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் போட்டி, செஸ்போட்டி, கேரம் போட்டி சிலம்பம், பூப்பந்து போட்டிகளும் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஆக்கி, கபடி, நீச்சல், மேஜை பந்து, கைப்பந்து, இறகு பந்து, கோ-கோ, கிரிக்கெட், செஸ், கேரம், சிலம்பம் போட்டிகளும் நடைபெறுகிறது.
போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
பொது பிரிவினர்களுக்கு தடகளம், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம் மற்றும் கபடி கிரிக்கெட் இறகு பந்து போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் ஆதார், இருப்பிட சான்றிதழ் அல்லது ரேஷன் கார்டு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கை கால் ஊனமுற்றோருக்கு தடகளம், சர்க்கர நாற்காலி மற்றும் இறகு பந்து விளையாட்டுப் போட்டிகளும், பார்வை திறன் குறைவுடையோருக்கு தடகளம் அடாப்டட் வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தடகளம், எரிபந்து, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காது கேளாதவருக்கு தடகளம் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது. அரசு ஊழியர்களுக்கு தடகளம், கபடி, வாலிபால் மற்றும் கேரம் இறகு பந்து, செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார், இருப்பிட சான்று அல்லது ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அரசு ஊழியர் அடையாள அட்டை, ஆதார் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் இணைதளத்தின் பதிவு செய்த நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7ம் தேதி முதல் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000மும், இரண்டாவது பரிசாக ரூபாய் 2000-மும், மூன்றாவது பரிசாக ரூபாய் 1000 அவரவர் வங்கி கணக்குகளில் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



