நாகர்கோவில், ஜூலை 7 –
குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 7 ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாகும். தினம்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் அவர்கள் மீண்டும் வந்து செல்லும் அளவிற்கு சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட சொத்தவிளை கடற்கரையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. இதனை கருத்தில் கொண்டு 2024-2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொத்தவிளை கடற்கரை பகுதியை நவீனப்படுத்தி சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம் போன்ற கடற்கரை தலங்களைப் போன்று நீலக்கொடி சான்றிதழ் பெற்று, சொத்தவிளை சுற்றுலாத்தலம் நவீனப்படுத்தப்படும்.
தொடர்ந்து இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சங்குத்துறை கடற்கரை பகுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சங்குத்துறை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி சுற்றுலா அலுவலர் வெள்ளசாமி, மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஜெரால்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



