கோவை: ஆக.24
கோபிச்செட்டிப்பாளையத்தில் கோவை விஜிஎம் மருத்துவமனையின் முதல் செயற்கைக்கோள் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலகத்தரமான மருத்துவ சேவைகளை அவர்களது பகுதிக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய மருத்துவ மையத்தின் மூலம் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை அருகிலேயே பெற முடியும். அவசர மற்றும் சிக்கலான மருத்துவ நிலைகளில் தேவையான சிகிச்சைகளை கோவை விஜிஎம் மருத்துவமனையின் பிரதான மையத்துடன் இணைந்து வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 3 மருத்துவர்கள் பணியில் இருப்பதுடன், நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுமன், வம்சி மூர்த்தி, மதுரா பிரசாத், மித்ரா பிரசாத், ரங்கநாதன், ரகுநாதன், ரமேஷ்பாபு, தனபால், கணேசன், மோகன், குழந்தைசாமி, குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



