மார்த்தாண்டம், ஜூன் 20 –
குலசேகரம் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிட வந்தார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இருக்கையில் இருந்து சரிந்து விழச் சென்றுள்ளார். இதை பார்த்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஓடி சென்று அவரை தாங்கிப் பிடித்தார். அப்போது அந்த நபர் தன்னை பிடிக்க பிடித்த ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஓட்டல் ஊழியருக்கும் போதை ஆசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் ஓட்டல் ஊழியரை சமாதானம் செய்து, போதை ஆசாமியை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அதே போதை நபர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் இரவு 10:30 மணி அளவில் அதே ஓட்டலுக்கு காரில் வந்துள்ளார். அப்போதும் போதையில் இருந்த அவர் காரை ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு வேகமாக ஓட்டலுக்குள் சென்று தன்னிடம் ஏற்கனவே தகராறு செய்த ஓட்டல் ஊழியரை தேடினார். அங்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தவரை திடீரென சென்று போதை ஆசாமி தாக்கியுள்ளார். பின்னர் திடீரென காரில் சென்று துப்பாக்கியை (ஏர் கன்) எடுத்து வந்தார். இதை பார்த்ததும் ஓட்டல் இருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொதுமக்கள் மற்றும் அந்த போதை ஆசாமியின் மனைவி, உறவினர்கள் சேர்ந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர். ஆனால் போதை நபர் துப்பாக்கியை விடாமல் சுட்டு விடுவேன் என மிரட்டினார். பின்னர் போராடி துப்பாக்கியை பறித்து சம்பந்தப்பட்ட போதை நபரை காரில் ஏற்றி அனுப்ப முயன்றனர். இதற்கு இடையில் இதை குறித்து அறிந்த குலசேகரம் போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.
இரவு முழுவதும் போலீசாரிடமும் அந்த போதை நபர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் கூறுகையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சாதாரண ஏர் கன் வகையை சேர்ந்ததாகும் என்றனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


