நாகர்கோவில், ஜூலை 29 –
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் (35). செப்டிக் டேங்க் கிளீனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால் தலை பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் மதுரை வீரன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்மநபர்கள் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மதுரை வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் தம்பி செல்லையா என்பவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் அவரது குடும்பத்தினர் மதுரைவீரனை கொலை செய்தது தெரியவந்தது.
மதுரைவீரன் குடும்பத்தாருக்கும் மாரியப்பன் குடும்பத்தாருக்கும் செப்டி டேங்க் வண்டி ஓட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டு மாரியப்பனின் தம்பி செல்லையாவை 2021-ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையை எல்கைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து மதுரை வீரன் கும்பல் கொலை செய்தது. அந்த வழக்கு தற்போது தக்கலை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினமும் மதுரை வீரன் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது மாரியப்பன், மதுரைவீரனை சமரசம் பேச அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் மதுரை வீரன் சென்று இருக்கிறார். அப்போது மாரியப்பனின் குடும்பத்தினர் மதுரை வீரன் உடன் தகராறு செய்தது மட்டுமின்றி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சாரமாரியாக மதுரை வீரனை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கோர்ட்டுக்கு சென்று வந்த மதுரை வீரனை மாரியப்பன் உள்ளிட்டோர் திட்டமிட்டு வரவழைத்து சராமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாரியப்பன் அவரது தாய் நாச்சியார், மாரியப்பனின் மனைவிகள் முத்துலெட்சுமி, சரண்யா, மாரியப்பனின் தங்கை ஐஸ்வர்யா உள்ளிட்ட 6 பேர் மீது சுசீந்திரம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். கொலை செய்யப்பட்ட மதுரைவீரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கின்றது. இதனால் அவரது பெயர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கொலையில் தலைமறைவாக உள்ள மாரியப்பன் மீதும் பல வழக்குகள் உள்ளது. அவரது பெயர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக மாரியப்பனின் குடும்ப உறவுக்கார 17 வயது பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தி விசாரணையில் சமாதானம் பேச வந்த இடத்தில் மதுரை வீரன் அவதூறாக பேசியதால் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். அவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் மற்ற 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


