கன்னியாகுமரி, அக். 16 –
கன்னியாகுமரி அருகே சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர். இவரது மனைவி தருணா (29). இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவர்கள் தோவாளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றனர். பின்னர் இருவரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். தோவாளை நான்கு வழி சாலையில் அவர்கள் பயணம் செய்யும்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் கார்த்திக், தருணா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த போது தருணா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை வரும் தருணாவின் கணவர் கார்த்திக் ஆரல்வாய்மொழி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் விபத்து நடந்தபோது தனது மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் மற்றும் மோதிரம் என சுமார் 11 எடையுள்ள நகைகள் மாயமாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் யாரோ என்று திருடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பலியான பெண்ணின் 11 பவுன் நகைகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


