களியக்காவிளை, ஜூன் 6 –
பெங்களூருவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையில் கள்ள நோட்டுகளுடன் வந்த மூன்று பேரை பாறசாலை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட ஷூட்டிங் சம்பந்தமாக கொண்டுவரப்பட்டதாக பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சஜி (31), அபி (34), அஷ்டமன் போற்றி (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளில் ‘சல்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்றும், ‘ஒன்லி ஃபார் ப்ரொஜெக்ஷன் பர்பஸ்’ (For Projection Purpose Only) என்றும் அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கைதான கும்பல், 1 லட்சம் ரூபாய் உண்மையான பணத்தைக் கொடுத்தால் அதற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு ஏற்கனவே 2.5 கோடி ரூபாய் கள்ள நோட்டு மோசடி வழக்கில் தொடர்புடைய பழைய குற்றப் பின்னணி இருப்பது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
பாறசாலை போலீசார் இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



