நாகர்கோவில், ஜூலை 17 –
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளையும் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக, நபார்டு, முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட முதன்மைத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு அந்தந்த துறை அலுவலர்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தகுதிவாய்ந்த அனைத்துப் பயனாளிகளுக்கும், கிராமப்புறங்களின் கடைக்கோடி பகுதி வரை சென்றடைவதை துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி)மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



