நாகர்கோவில், ஆக. 29:
வெள்ளமடம் அருகே அய்யங்கார் மடையிலிருந்து 7 குளங்கள் மற்றும் சுமார் 3,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் புத்தனாறு கால்வாயை நிலஅளவை செய்து, எல்லைக்கற்கள் நட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இப்பிரச்சனை மீண்டும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப், உடனடியாக நிலஅளவுப் பணிகளை மேற்கொண்டு, எல்லைக்கற்கள் நட்டு, படிவம்-1 வழங்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, 28-ம் தேதி நிலஅளவுப் பணிகள் தொடங்கின. பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலையில் நடைபெற்ற பணிகளில் பாசனத்துறை நிர்வாகிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆய்வின்போது ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் தொடர்பான விவரங்கள் படிவம்-1-ல் பதிவு செய்யப்பட்டன.
நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும், ஆய்வில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



