தூத்துக்குடி, செப்.04.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் 39-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி விஸ்வரூப தரிசனம், மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நாகலாபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கவுண்டன்பட்டி நவநீதகிருஷ்ணன் கோவில் வரை செண்டை மேளத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வானவேடிக்கையுடன் நடைபெற்ற ஊர்வலத்தை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கவுண்டன்பட்டி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கவுண்டன்பட்டி யாதவ சமுதாய மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



