தூத்துக்குடி, ஜூலை 27 –
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. லோடுமேன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர் தீப்பெட்டி கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சுரேஷ்குமார் மற்றும் ராஜா முத்துப்பாண்டி என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் ராஜா முத்துப்பாண்டி சிறு வயது முதலே ஜிம்முக்கு சென்று விளையாடுவதில் ஆர்வம் உள்ளவராக இருந்து வந்தார் அவரது ஆர்வத்தை கண்டு உணர்ந்து அவரது பெற்றோர் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர். மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வெற்றி கோப்பைகளை கைப்பற்றி வந்தார்.
காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்று இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்த சூழலில் தற்போது நேற்று நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி ஆடவர் 65 கிலோ பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு முதலமைச்சரால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியன் குடும்பத்தினர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.



