விளாத்திகுளம், ஜூன் 26 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூர் சாலை அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. யோகிராம் சூரத்குமாருக்கு பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் தீபாதாரணை நடைபெற்றது.
மேலும் பல்வேறு வண்ண மலர்களால் மாலை அணிவித்து, வருஷாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் யோகிராம் சூரத்குமாரின் நாமங்களை பாடி வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் சுவாதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் மகா ஆரத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.



