திண்டுக்கல், அக்.02
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலசமுத்திரம், பொருந்தலாறு, பாப்பம்பட்டி, கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாலசமுத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமர், ஜெயராம், ரவிக்குமார் மற்றும் எல்லத்துரை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 273 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத மது விற்பனையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைப்போர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.



