கன்னியாகுமரி, அக். 9 –
கன்னியாகுமரியில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் கோயில் வளாகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். இதனை தடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், தன்னம்பிக் கையுடன் வாழ்க்கையின் இதர காலங்களை கழிக்கவும், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைந்து கன்னியாகுமரி நகராட்சி சார்பில் புன்னகை இல்லம் என்ற பாதுகாப்பு மறுவாழ்வு இல்லம் பரமார்த்தலிங்கபுரத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆதரவற்ற, பிச்சை எடுக்கும் சூழலில் உள்ளவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை, சுகாதார வசதிகளுடன் கூடிய வசிப்பிடம், ஆலோசனை மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் ஆணையர் கண்மணி முன்னிலையில் நடந்தது.
கன்னியாகுமரியில் 18 இடங்களில் சாலை மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் ஆதரவற்றவர்கள் இருப்பதும், பிச்சை எடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தடுக்க பஞ்சலிங்கபுரம் புன்னகை திட்ட இல்லத்தில் உணவு, உறைவிடம், மருத்துவம், சுகாதார வசதிகள் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இங்கு ஆண், பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக நகராட்சியுடன் இணைந்து காவல்துறை, சுற்றுலாத்துறை, வருவாய் துறை, சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்கள், பொதுநல பணியாளர்கள் ஆகியோர் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பை நகராட்சிக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
மேலும் பிச்சை எடுக்கும் ஆதரவற்றோர்களை கண்டால் 7598797444 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட், கிராம நிர்வாக அலுவலர் சீதா, நகர்மன்ற உறுப்பினர்கள் சுஜா மெர்லின், இக்பால், பூலோக ராஜா, அட்லின், புன்னகை இல்லம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், இல்ல மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


