தருமபுரி, மே 11 –
தருமபுரி மாவட்ட சுற்றுலா தளமான ஒகேனக்கலில், கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் அண்டை மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை அழகை பரிசலில் சென்று கண்டுகளிக்கவும், இளைப்பாறி வறுவல் மீன்கள், மீன் குழம்பு மற்றும் மீன் உணவுவகைகள் அருந்தி செல்கிறார்கள்.
ஆகையால் ஒகேனக்கலில் விற்கப்படும் மீன்கள் தரம் மற்றும் உணவகங்கள் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன் வள ஆய்வாளர் திருப்பதி, மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் பாதுகாவலர்கள் லட்சுமணன், அருண் உள்ளிட்ட குழுவினர் குழுவாக மீன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில், இருப்பு குடோன்களில் பலதரப்பட்ட திலேபியா, பாறை, வாளை மீன், ரோகு, கட்லா, மீர்கால், புல்கெண்டை, கண்ணாடி கெண்டை என ஆந்திரா டேம் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர்.
ஒரு விற்பனை கடையில் மட்டும் மிர்கால் வகை மீன்கள் நாள்பட்டு கெடும் நிலையில் இருந்தது. ஐந்து கிலோ அளவிலானது அப்புறப்படுத்தி விற்பனையாளருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க பார்மலின் கெமிக்கல் ஏதும் மீன்களில் உள்ளனவா, ஏதும் தெளித்து இருக்க வாய்ப்புள்ளதா என பார்மலின் பரிசோதனை கிட் உபகரணம் கொண்டு உடனடி பார்மலின் பரிசோதனைகள் இருப்பு மீன்கள், விற்பனை மீன்கள் மற்றும் சமையல் செய்யும் இடத்தில் கட் செய்த மீன்கள் என பல்வேறு இடங்களில் பார்மிலின் கண்டுபிடிக்கும் கிட் கொண்டு கள ஆய்வில் அதில் கிட் உள்ள ஸ்டிரிப் மூலம் சோதனை செய்யப்படும்.
மீனின் சதை பகுதி மற்றும் இதர பகுதி செதில்கள் என பல பகுதிகளில் ஒட்டி நனைத்து எடுத்து பின்பு கிட்டில் உள்ள ரீஏஜென்ட் திரவ சொட்டு விடும்போது மீன்களில் ஃபார்மலின் கலந்து இருக்கும் பட்சத்தில் அந்த ஏட்டில் (ஸ்டிரிட்) நீல நிற கலர் மாறும் , இல்லாத இருக்கும் பட்சத்தில் நிறம் மாற்றமின்றி தோன்றும். ஆய்வில் எந்த மீனிலும் அதாவது ஸ்டிரிப்பில் அவ்வாறான கலர் மாற்றம் நிகழவில்லை. பார்மலின் ஏதும் தெளிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.
நீர்வீழ்ச்சி செல்லும் பாதை, பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகள், முதலைப்பண்ணை அருகில் என பல்வேறு இடங்களில் உணவகங்கள் இறைச்சி மற்றும் மீன் வறுவல் கடைகளில் தீவிரமாக ஆய்வு செய்தபோது பேருந்து நிலையம் அருகில் இரண்டு கடைகளில் இருந்து முறையே பலமுறை பயன்படுத்திய எண்ணெய் ஒரு லிட்டர், செயற்கை நிறமூட்டி பவுடர்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவுபடி தலா ரூ. 1,000 உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
விற்பனை நிலையங்களில் மீன்கள் வெயில் படாத வாரும், நீண்ட நேரம் வெயிலில் வைக்காமல் பாதுகாப்பாக ஐஸ் பெட்டியில் வைத்து பராமரித்து விற்பனை செய்யவும், மீன் வறுவல் மற்றும் மசாலா தடவிய மீன் இறைச்சி உரிய கண்ணாடி பெட்டி அல்லது தூசிகள் உள்ளிட்ட அயற் காரணிகள் படாதவாறு பாதுகாப்பாக முறையில் காட்சிப்படுத்திடவும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமலும் செயற்கை நிலம்மூட்டிகள் கண்டிப்பாக தவிர்க்கவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
சுற்றுப்புற சுகாதாரம் தன் சுத்தம் மூலப்பொருட்கள் தரமானதாகவும் பயன்படுத்திடவும் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று வணிகம் செய்திடவும் முறையாக புதுப்பித்தல் வேண்டுமென உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.



