பரமக்குடி, செப். 8 –
மதுரை விமான நிலையம் பெயர் சூட்டுவது குறித்து தேவேந்திரகுல வேளாளர்களின் எண்ணத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு செப்.11 அதிமுகவினர் தியாகியாரின் நினைவிடத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள்,சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை அனுசரித்து வரும் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனுக்கு கொடுத்துள்ள மனுவில், வருகின்ற செப். 11 சுதந்திர போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், நடைபெறவுள்ள நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் குறித்து தேவேந்திர குல வேளாளர் மக்களின் எண்ணத்திற்கு எதிராக தனது கருத்தை வெளிப்படுத்தினார். அக்கருத்தை தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
60 ஆண்டுகளாக நடந்து வரும் குருபூஜைக்கு இதுவரை அஇஅதிமுக தலைமை மரியாதை செலுத்த வந்ததில்லை. மேலும், இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தலைமையின் மீது ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் இக்கருத்து மேலும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் உள்ளது. எனவே அஇஅதிமுகவைச் சேர்ந்த எந்த நிர்வாகிகளும் நினைவிடத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும் தேவேந்திரர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் சார்பாகவும் தேவேந்திர குல வேளாளர் பொதுமக்கள் சார்பாகவும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், அஇஅதிமுக சார்பில் தியாகியாரின் நினைவிடத்திற்கு யாரும் வரும் பட்சத்தில் சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு தேவேந்திரர் பண்பாட்டுக் கழக நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை ஆட்சியரிடம் தலைவர் சக்கரவர்த்தி வழங்கினார். மேலும் ராமநாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.



