ஊத்தங்கரை, ஜூன் 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை பி.டி.ஓ., தவமணி தலைமையில் நடந்தது. இதில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசுகையில், ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் சரியாக திறப்பதில்லை, அதில் வினியோகிக்கப்படும் அரிசி கள்ள மார்க்கெட் வியாபாரிகளுக்கு விற்பது குறித்தும், அதேபோல் சுற்று வட்டார கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு செய்வதாகவும், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலைகளில் அதிகளவு மாடுகள், நாய்கள் சுற்றித் திரிவதால், விபத்துகள் ஏற்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சரியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் அதிகளவு பணம் வசூலிக்கும் நிலை உள்ளது. அதேபோல் கிராமங்களில் போலி டாக்டர்கள் அதிகளவு உள்ளனர். கள்ளத்தனமாக மது, கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீஸ் ஸ்டேசனில் கொடுக்கும் புகார் மனு மீது விசாரிக்க கால தாமதம் ஏற்படுகிறது. உள்ளிட்டவைகள் குறித்து அந்தந்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உதவி துணை வேளாண்மை அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன், ஊத்தங்கரை தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.