ஈரோடு, ஜூலை 28 –
கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. தமிழ் நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விவசாயிகள் கடன் பெற சிபில் ஸ்கோர் பெற வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யா மூர்த்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் கே.கே.சி. பாலு, கோவிந்த ராஜ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்திக், ம.தி.மு.க சார்பில் கோபு, முசிறி ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களை ஈரோடு டி.எஸ்.பி. முத்து குமரன் தலைமையில் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். இவர்களை கைது செய்ய வாகனங்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் போலீசாருக்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படாமல் கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.