தருமபுரி, செப். 2:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 7-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் சரக அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 36 மாணவிகள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்று 155 புள்ளிகள் பெற்று, தனிநபர் பட்டங்கள், கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வென்றதுடன், 7-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றினர்.
மேலும், கபடி, கோ-கோ, எறிபந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட குழு மற்றும் தனிநபர் போட்டிகளிலும் மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் விஜயா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சாதனை படைத்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் கீதா, மாது உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



