ஈரோடு ஏப் 21
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், வீரப்பன்சத்திரம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே மாதம்) இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு இடையே நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள். மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி. கிருஷ்ணகிரி. கரூர் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்க உள்ளன.
இக்கண்காட்சியில் அரசு துறைகளின் சார்பில் 70 அரங்குகளும் தனியார் நிறுவனங்கள் சார்பில் (உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உட்பட) 130 அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. நாள் ஒன்றுக்கு 5000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீனரக மற்றும் பாரம்பரிய விதைகள், பழச்செடிகள்,குழித்தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் இடுபொருட்கள். நவீன வேளாண் இயந்திரங்கள் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் இ-வாடகை, உழவன் செயலி, வேளாண் விவசாயிகளுக்கான பதிவு போன்ற சேவைகளும் வழங்கப் படவுள்ளன.
சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் (பொ)தனலட்சுமி, வேளாண்மைத்துறை இணை தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இயக்குனர் மரகதமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்