தென்தாமரைகுளம் அக்., 19.
குமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மணியா நகர் ஊர் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் மிஷின்களும், 100 மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பேசியதாவது. பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஊர் தோறும் தொழில் பயிற்சியும் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம், மேலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் ஊக்கத்தொகைகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வ மெர்லின், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், விவசாய அணி செயலாளர் முருகன், தென்தாமரை குளம் பேரூர் தலைவர் பால் ஜெபா, ராஜேஷ் மற்றும் செட்டிவிளையைச் சேர்ந்த செல்லத்துரை,, பாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையை பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.