திருப்பூர் ஜூலை: 18
ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில சிறப்பு பேரவை கூட்டம் திருப்பூர் பாளையக்காடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பார்வேர்ட் பிளாக் கட்சியினர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் கதிரவன் நிகழ்ச்சியை தடுக்க வருவதாகவும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தகராறு செய்ய உள்ளதாக மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தரப்பினர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூருக்கு மதுரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் வந்திருந்த கதிரவன் அணியினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் கோவில் வழி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் கதிரவன் அணியினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து போலீசார் திருப்பூர் மாநகருக்குள் அவர்களை அனுமதிக்காத நிலையில் அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் தேசிய துணை தலைவர் கதிரவன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பேசிய கதிரவன் கட்சியின் விதிமுறைகளை மீறி சிறப்பு பேரவை கூட்டம் நடத்தப்படுவதாகவும்,மாநில பொதுச் செயலாளர் கர்ணன் முறையாக அறிவிக்கப்படவில்லை எனவும் அந்த கூட்டம் செல்லாது என்றும் கட்சியை மீட்டெடுப்போம் என பேசினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கதிரவன் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.