தூத்துக்குடி, டிசம்பர் 04 –
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறைமுக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பசுமை இழுவை படகுகளை வாங்கும் பணியை தொடங்கியுள்ளது.
கப்பல் துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், தேசிய பசுமை இழுவை படகு மாற்றத் திட்டத்தின் (National Green Tug Transition Programme) ஒரு பகுதியாக அதிநவீன பசுமை இழுவை படகு சேவைக்கான உத்தரவு வழங்குவதன் மூலம் பசுமை வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 60 டன் திறன் மின்சாரத்தில் இயக்கக்கூடிய இழுவை படகினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை Knowledge Marine & Engineering Works Ltd. (KMEW) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த இழுவை படகு இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் ரூ. 385.76 கோடி மதிப்புடையது. இது 15 ஆண்டுகளுக்கு இழுவை படகுகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளை உள்ளடக்கியது.
பசுமை இழுவை படகு மாற்றத் திட்டம் (GTTP): இந்த கொள்முதல் பசுமை இழுவை படகு மாற்றத் திட்டத்தின் (Green Tug Transition Programme) ஒரு பகுதியாகும். இத்திட்டம் முக்கிய துறைமுகங்களில் டீசல் மூலம் இயங்கும் இழுவை படகுகளை படிப்படியாக நீக்கி, அவற்றை மின்யூட்டி, அம்மோனியா, ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் பசுமை இழுவை படகுகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.
பசுமை இழுவை படகுகளை கொள்முதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ள முதல் ஐந்து முக்கிய பெருந்துறைமுகங்களில் வ.உ.சி துறைமுகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிற துறைமுகங்கள்: ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம், தீண்டயால் துறைமுக ஆணையம், நீயூமங்களூர் துறைமுக ஆணையம், மற்றும் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம்.
கார்பன் உமிழ்வு குறைப்பு: மின்சார இழுவை படகுகளை (Electric Tugs) பயன்படுத்துதல் கார்பன் உமிழ்வை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையான மின்சார இழுவை படகுகள் 100% வரை உமிழ்வைக் குறைக்கக்கூடியவை.கலப்பின (Hybrid) இழுவை படகுகள் சுமார் 25-35% வரை உமிழ்வைக் குறைக்கும் என மதிப்பிடப்படுகிறது.
காலநிலை மாற்ற மாநாட்டு உறுதிப்பாட்டுடன் ஒத்திசைவு:இந்த முயற்சி, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP26) அமிர்தம் அறிக்கையில், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் (net-zero) உமிழ்வை அடைவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ளார்.
Maritime Amrit Kaal Vision-2047 படி, அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் பசுமை இழுவைபடகு மாற்ற விழிப்புணர்வு நிகழ்வு 1 (Green Tug Transition Programme-I) செயல்படுத்த வேண்டும் என்று கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வ.உ.சி துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் “தற்பொழுது வ.உ.சி துறைமுகத்தில் மூன்று டீசல் மூலம் இயங்க கூடிய இழுவை படகுகளை இயக்குகிறது. ஒன்று 45 டன் திறனுடன். மற்ற இரண்டும் 50 டன் திறனுடன். துறைமுக செயல்பாடுகளில் சுத்தமான ஆற்றல் பயணத்தை முன்னேற்றுவதன் மூலம், வ.உ.சி துறைமுகம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பசுமை கடல்சார் வளர்ச்சிக்கும் தன்னுடைய உறுதியை வலியுறுத்துகிறது என்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


