மதுரை டிசம்பர் 17,
மதுரையில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே பில்லர் மையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மாவட்டத்திற்கு மூவர் வீதம் இப்பயிற்சிக்கு 114 நபர்கள்
கலந்து கொண்டனர். டிசம்பர் 16,17 ஆகிய இரு நாட்களுக்கு திட்டமிட்ட பயிற்சியினை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இணை இயக்குநர் (சிறப்பு திட்டங்கள்) R.சுவாமிநாதன் தலைமையேற்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் சார்ந்து SCERT நிறுவனம் கையேடு தயாரித்துள்ளது. இக்கையேட்டில் குழந்தைகள் பாதுகாப்பின் இன்றியமையாமை, பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், போக்சோ சட்டம் 2012, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வும் கையாளும் முறைகளும் முதலியவை இடம் பெற்றுள்ளன எனவும் கூறினார். இப்பயிற்சியில் கருத்தாளர்களாக சென்னை, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இணை இயக்குநர் (ஓய்வு) முனைவர் AN. ராஜ் சரவணகுமார், குழந்தைகள் உரிமைகளும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளும் குறித்து பேசினார். விருதுநகர் குழந்தை நலக்குழு உறுப்பினர் K.ராம் ஹரி, போக்சோ சட்டத்தில் குழந்தை நலக் குழுவின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தின் பங்கினை விளக்கினார். ராணிப்பேட்டை மாவட்டம். ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் N.வளர்மதி, சேலம் மாவட்டம் உத்தம சோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் R. மைதிலி அவர்களும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை விளக்கினர். இப்பயிற்சியினை மதுரை மாவட்டம், தே கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் P. சலந்தர்ராஜன் ஒருங்கிணைத்து நடத்தினார் மேலும், விருதுநகர் மாவட்டம். பாளையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். செல்வி அவர்கள் மற்றும் சென்னை. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தே. ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்